அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை நிறுத்தி டாக்டர்கள் போராட்டம்

மருத்துவ பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடுகோரி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகளை நிறுத்தி டாக்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-05-03 23:00 GMT
திருச்சி,

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர் களுக்கு மருத்துவ பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ‘நீட்‘ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 19-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருச்சி அரசு மருத்துவமனையில் காலை 7 மணி முதல் 9 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை டாக்டர்கள் புறக்கணித்து வருகிறார்கள். இதனால் புறநோயாளிகள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அறுவை சிகிச்சைகள் நிறுத்தம்

இந்தநிலையில் நேற்று முதல் அரசு டாக்டர்களின் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. அதாவது, புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணிப்பதுடன், அவசர அறுவை சிகிச்சைகளை தவிர வேறு எந்த விதமான அறுவை சிகிச்சைகளையும் செய்ய மாட்டோம் என்று டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி அரசு மருத்துவமனையிலும் நேற்று டாக்டர்களின் போராட்டம் காரணமாக, அவசர அறுவை சிகிச்சைகள் தவிர மற்ற அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன.

மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்திலும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டமும் நடத்தினர். 

மேலும் செய்திகள்