மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வழங்க வேண்டும் விவசாயிகள் கருத்தரங்கில் தீர்மானம்

வறட்சியின் கோர பிடியில் சிக்கி உள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-05-03 23:00 GMT
திருச்சி,

திருச்சி அருகே உள்ள இனாம்புலியூரில் நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி சார்பில் ‘வறட்சியின் கோர பிடியில் தமிழகம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு மாநில தலைவர் புலியூர் நாகராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். முன்னாள் எம்.பி. ராம்பாபு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்பட விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஒற்றை தீர்ப்பாயம்

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு குடிநீர் கிடைக்காமல் பெண்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி நீர் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒற்றை தீர்ப்பாயத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மத்திய அரசு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்யவேண்டும். கடும் வறட்சியை கருத்தில் கொண்டு ஜப்தி உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை வங்கிகள் நிறுத்தி வைக்கவேண்டும். மேட்டூர் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரும்போது அந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகளின் பங்களிப்போடு மராமத்து பணிகளை செய்யவேண்டும்.

ரூ.30 ஆயிரம் கோடி

தமிழக அரசு நீர்ப்பாசன துறைக்கு என தனி அமைச்சகத்தை உருவாக்கவேண்டும். வறட்சியின் கோர பிடியில் சிக்கி உள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி சிறப்பு நிதி வழங்கவேண்டும். காவிரி, கொள்ளிடத்தின் குறுக்கே தேவையான இடங்களில் எல்லாம் தடுப்பணைகளும், கதவணைகளும் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக வறட்சியின் காரணமாக அதிர்ச்சியில் மரணம் அடைந்த மற்றும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் உருவ படங் களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

மேலும் செய்திகள்