தகுதி அடிப்படையில் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு புதுச்சேரி பல்கலைக்கழகம் தகவல்

தகுதி அடிப்படையிலேயே பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2017-05-03 22:30 GMT

 

புதுச்சேரி

தகுதி அடிப்படையிலேயே பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுவை பல்கலைக்கழகத்தின் பொதுமக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

முறையான அனுமதி

மத்திய அரசு சட்டத்துறை பரிந்துரையின்பேரில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முறையான அனுமதிக்கு பிறகே பொறுப்பு துணைவேந்தராக அனிஷா பஷீர்கான் தற்போது செயல்பட்டு வருகிறார். புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு ஏற்கனவே மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டும், அன்றாட நிர்வாகத்தில் தாமதம் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் அனிஷா பஷீர்கான் பொறுப்பு துணைவேந்தராக இருந்தாலும் தனது பணியை செய்து வருகிறார்.

தகுதி அடிப்படையில் தேர்வு

புதுவை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பேராசிரியர் பதவியில் இருந்து புல முதன்மையர் (டீன்) பதவிக்கான பதவி உயர்வு என்பது பேராசிரியர்களின் தகுதி மற்றும் அவர்களின் பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே வழங்கவேண்டும். மாறாக அரசின் விதிகளுக்கு புறம்பாகவோ, தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டோ வழங்க முடியாது. அனைத்து நிலைகளிலும் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை முன்னிட்டும், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுமே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

தரமான மாணவர்களை உலக அளவில் தயார்படுத்துகின்ற பணியை தனது நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பொதுமக்களும், அமைப்புகளும் ஒத்துழைத்து சமூக மேம்பாட்டிற்கு உதவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்