உடல்நலம் தேறியது எமான் அகமது இன்று ‘டிஸ்சார்ஜ்’ ஆகிறார்

உடல் பருமனை குறைக்க மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குண்டு பெண் எமான் அகமது, இன்று ‘டிஸ்சார்ஜ்’ ஆகிறார்.

Update: 2017-05-03 21:57 GMT

மும்பை,

உடல் பருமனை குறைக்க மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குண்டு பெண் எமான் அகமது, இன்று (வியாழக்கிழமை) ‘டிஸ்சார்ஜ்’ ஆகிறார்.

எமான் அகமது

எகிப்து தலைநகர் கெய்ரோவை சேர்ந்த பெண் எமான் அகமது (வயது 36). இவர் தன்னுடைய 11–ம் வயதில் இருந்தே பக்கவாதத்தாலும், உடல் பருமனாலும் படுத்த படுக்கையானார். இதனால், அவரது உடல் எடை 500 கிலோவாக அதிகரித்தது. இதன் காரணமாக ஏறத்தாழ 25 ஆண்டுகளாக வெளி உலகை காணாமல் படுக்கையிலேயே காலத்தை தள்ளினார்.

உலகின் அதிக எடை கொண்ட குண்டு பெண்ணாகவும் கருதப்பட்டார். அவரது நிலையை அறிந்த மும்பை தனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர் முப்பாஷால், அவருக்கு இலவசமாக எடை குறைப்பு சிகிச்சை அளிக்க முன்வந்தார். இதைத்தொடர்ந்து, எமான் அகமது கடந்த பிப்ரவரியில் மும்பை அழைத்து வரப்பட்டு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ரூ.3 கோடி செலவு

இந்த நிலையில், எமான் அகமதுவின் உடல்நலம் தேறியிருப்பதாகவும், அவர் இன்று (வியாழக்கிழமை) ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுவார் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் முப்பாஷால் மும்பையில் நேற்று நிருபர்களிடம் கூறினார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘எமான் அகமதுவின் உடல் எடை 177 கிலோவாக குறைந்துவிட்டது. அவர் திடகாத்திரமாகவும், சீராகவும் இருக்கிறார். நாளை (அதாவது இன்று) காலை 10.30 மணிக்கு ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிறார். சிகிச்சைக்காக இதுவரை ரூ.3 கோடி செலவாகி இருக்கிறது. இருந்தாலும், ஒரு பைசா கூட அவரிடம் இருந்து நாங்கள் பெறவில்லை. ரூ.65 லட்சம் நன்கொடை கிடைத்தது’’ என்றார்.

அபுதாபி செல்கிறார்

டிஸ்சார்ஜ் ஆனதும் எமான் அகமது அபுதாபி அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சில நாட்கள் தங்கியிருந்து மேல்–சிகிச்சை பெற இருப்பதாக டாக்டர் முப்பாஷால் தெரிவித்தார்.

இது தொடர்பாக அபுதாபி ஆஸ்பத்திரியில் இருந்து மும்பை ஆஸ்பத்திரிக்கு மெயில் வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்