வேலூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வேலூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2017-05-18 00:15 GMT
வேலூர்,

தொலைதூர ஊர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கியதை கண்டித்து வேலூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

பணியிட மாறுதல்

தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கடந்த மாதம் 1-ந் தேதி மூடப்பட்டன. அதன்படி வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் அரக்கோணம் மண்டலங்களில் 178 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. வேலூர் மண்டலத்தில் மட்டும் 107 கடைகள் மூடப்பட்டு விட்டன.

இவற்றில் ஒரு சில கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு 1½ மாதத்திற்கு மேலாகியும் மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்த மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்களுக்கு பணிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் வேலூர் மண்டலத்தில் உள்ள விற்பனையாளர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மண்டலத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் அவர்களுக்கு பணிவழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளிருப்பு போராட்டம்


ஆனால் அவர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து நீண்டதூரத்தில் பணி வழங்கப்பட்டிருப்பதாக கூறி நேற்று வேலூரில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் பழனி தலைமையில் கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில் “மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் வேலைபார்த்த விற்பனையாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்தின் அருகில் உள்ள கடைகளில் பணிவழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் வேலூரில் உள்ளவர்களுக்கு திருப்பத்தூரில் பணிவழங்கப்படுகிறது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்து அருகில் இருக்கும் கடைகளில் பணி வழங்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்” என்றனர்.

மேலும் செய்திகள்