முள்ளம்பன்றியை வேட்டையாடி தின்ற புலி இறந்து கிடந்தது

பேச்சிப்பாறை அணைப்பகுதியில் முள்ளம் பன்றியை வேட்டையாடி தின்ற புலி இறந்து கிடந்தது. முள்ளம் பன்றியின் முட்கள் குத்தி குடல் கிழிந்ததால் அந்த புலி இறந்ததாக வனத்துறையினர் கூறினார்கள்.

Update: 2017-05-18 23:15 GMT
குலசேகரம்,

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையையொட்டி காயல்கரை வனப்பகுதி உள்ளது. இதன் அருகே பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன.

நேற்று காலை காயல்கரை பகுதிக்கு சென்ற சிலர் அங்கு புலி ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் வந்து இறந்து கிடந்த புலியை வேடிக்கை பார்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வன அலுவலர்கள், கால்நடை டாக்டர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் புலியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அந்த பகுதியில் புதைக்கப்பட்டது.

முள்ளம்பன்றி வேட்டை

புலி சாவுக்கான காரணம் குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

பேச்சிப்பாறை அணை அருகே இறந்து கிடந்தது பெண் புலி ஆகும். அந்த புலிக்கு 4 வயது இருக்கும். இரவு நேரத்தில் அணைப்பகுதிக்கு இரை தேடி அந்த புலி வந்துள்ளது. அங்கு சுற்றித்திரிந்த முள்ளம்பன்றியை வேட்டையாடி கொன்றது.

முள்ளம் பன்றியின் கூர்மையான முட்கள் குத்தியதில் புலியின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டது. முள்ளம் பன்றியை தின்றதால், புலியின் வயிற்றிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முட்கள் புலியின் குடலையும் கிழித்துள்ளன. இதனால் உயிருக்குப் போராடிய அந்த புலி, காயல்கரை பகுதியில் விழுந்து இறந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்