வறட்சியின் கோரப்பிடி

தமிழகத்தில் வறட்சி என்பது நமக்கு புதிதல்ல. பழங்காலம் முதலே வறட்சியை நாம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கோணங்களில் சந்தித்து வருகிறோம்.

Update: 2017-05-28 08:12 GMT
மிழகத்தில் வறட்சி என்பது நமக்கு புதிதல்ல.

பழங்காலம் முதலே வறட்சியை நாம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கோணங்களில் சந்தித்து வருகிறோம்.

பாண்டிய மன்னர் காலத்தில் தொடர்ந்து 12 ஆண்டுகள் வறட்சி நிலவியதற்கான குறிப்புகளை தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது.

வறட்சி என்பது ஒரு இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, ஆண்டுக்கணக்கிலோ நீடிக்கலாம்.

வறட்சியை நீக்குவதற்கு மழைப் பொழிவு ஒன்றே தீர்வு. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் வறட்சியை வெல்ல முடியும் என்பது நம்முடைய விஞ்ஞானிகளின் கருத்து.

வறட்சியின் காரணமாக நாட்டின் வேளாண்மை, பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

‘வறட்சி’ என்ற உடன் ஒரே வார்த்தையில், பருவமழை பொய்த்துப்போனதால் நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டுவிட்டது என்று சுருக்கமாக கூறிவிடுகிறோம்.

ஆனால் பருவமழை பொய்த்துப்போனதற்கான காரணங்கள் குறித்து நாம் சிந்திப்பதில்லை.

குறிப்பாக ஜீவநதிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து இயற்கை வளங்களை சுரண்டுவதால் நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு செல்வது, மரங்களை அழிப்பது, காடுகளை அழிப்பது, தொழிற்சாலை கழிவுநீரை பொதுநீர்நிலைகளில் கொட்டுவது, ஓசோன் படலத்தை சேதப்படுத்தவது குறித்து எவரும் வருத்தப்படுவதில்லை. நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் மண்வளம், மழைவளம் குறித்து எவரும் பெரிதாக கவலைப்படுவதில்லை.

தமிழகத்தில் கடந்த 1980-ம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்துப்போனதால், கடுமையான வறட்சி ஏற்பட்டு சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்தன.

குடிதண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதுடன் விவசாயமும், நெசவுத் தொழிலும் பாதிப்படைந்தன.

அதேபோல் 1982-ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சியால் நெல் மற்றும் நிலக்கடலை விளைச்சல் பாதிக்கப்பட்டது. மழை வளம் மிகுந்த நீலகிரி பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் தேயிலைத் தோட்டங்கள் காய்ந்து போயின.

1983-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் நெல், பயறுவகை மற்றும் சிறுதானியப் பயிர் விளைச்சல் பாதிப்படைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால், மின் உற்பத்தி பாதிப்படைந்தது.

1985-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் திருச்சி, சேலம், கோவை, தர்மபுரி, மதுரை மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை பூதாகரமானது. இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்தது.

1987 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சியால் மாநிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் இயல்பான அளவைவிட 11 மீட்டர் குறைந்தது.

சென்னையில் கடந்த 2003 ஆண்டு இறுதியில் ஏற்பட்ட குடிநீர் பஞ்சம் காரணமாக அப்போது குடிதண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டதுடன், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு ரெயில்களிலும், வாகனங்களிலும் தண்ணீர் கொண்டு வந்து வினியோகிக்கப்பட்டது.

இந்தியாவில், 11 மாநிலங்களில் 278 மாவட்டங்கள் அடிக்கடி வறட்சியால் பாதிக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களில் பாதிக்கு மேலான மாவட்டங்கள் பெரும்பாலும் வறட்சியை சந்திக்கின்றன.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் 1945-ம் ஆண்டு முதல் தற்போது வரை பார்த்தால் பூண்டி ஏரி 1949, 1952, 1969, 1974, 1983, 1987, 1989, 1990, 1991, 2000 ஆகிய ஆண்டுகளில் மே முதல் தேதியில் முற்றிலுமாக வறண்டுவிட்டது.

ஆனால் புழல் ஏரியை பொறுத்த வரையில் 1945 முதல் தற்போது வரை வறண்டு போகவில்லை.

சோழவரம் ஏரியில் கடந்த 1954-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை பார்த்தால் 1969, 1975, 1983, 1990, 1997, 2001 ஆண்டுகளில் வறண்டு விட்டது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாமல் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டன. விவசாயிகள் சாகுபடி செய்த நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் கருகின. இதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதிர்ச்சியில் ஏராளமான விவசாயிகள் இறந்தனர். இதையடுத்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

இதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் தமிழகம் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வறட்சி நிவாரணமும் வழங்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க தற்போது வரலாறு காணாத வகையில் ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளது. குடிப்பதற்குக்கூட தண்ணீர் கிடைக்காத நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கிய பெரும் பிரச்சினைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்தி பற்றாக்குறை ஆகியவை இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், அடுத்த 20 ஆண்டுகளுக்கு நமக்கு போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை. எனவே அதிக எண்ணிக்கையில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களை ஏற்படுத்த வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பெல் நிறுவனம் ஆகிய மூன்றும் இணைந்து தொழில்துறை கூட்டணி அமைத்து, கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மற்றும் மின்சக்தி நிலையங்கள் ஏற்படுத்துவதை குறிக்கோளாக கொள்ள வேண்டும்.

2025-ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகை 800 கோடியாக உயரும். அப்போது ஒரு பில்லியன் மக்களுக்கு மட்டுமே போதிய நீர் வசதி கிடைக்கும். 700 கோடி மக்களுக்கு சுத்தமான நீர் கிடைக்க வாய்ப்பு இல்லை. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்று கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் 17-ந் தேதி கல்பாக்கத்தில் நடந்த இந்திய அணுவியல் குழுவின் 14-வது ஆண்டு நிறைவு விழாவில், அப்போதைய ஜனாதிபதி மறைந்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பேசினார்.

வளர்ந்து வரும் மக்கள் தொகையும், தொழில் துறையும் அதிக அளவில் நீராதாரத்தை தீர்த்து வருகின்றன. இதனால் தமிழகமே ஒட்டுமொத்தமாக நீர் தேவையில் தட்டுப்பாடான நிலையில் இருக்கிறது.

அண்டை மாநிலங்களுடன் செய்து கொண்ட நதி நீர் ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் சொற்ப தண்ணீரை நம்பியே நாம் அதிக காலம் ஓட்ட முடியாது என்பது இன்னமும் தமிழகத்தில் உணரப்படாமலேயே இருக்கிறது.

இப்போதே தொலைநோக்கு பார்வையுடன் வருங்கால சந்ததியினருக்கான திட்டங்களை ஏற்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதோடு தற்கால தலைமுறைக்கே நீராதாரத்தை மேம்படுத்தவேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

இதன் காரணமாக அரசும் மாற்று வழியை தேடிச் செல்ல தொடங்கி உள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு புறம் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் பரிதவிக்கும் நிலை, மற்றொரு புறம் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் இருந்து பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் தண்ணீரின் அழகு.

இவ்வளவு தண்ணீர் இருக்கிறதே... இதனால் என்ன பயன்? என்கிற யோசனை வளர்ந்து பெரிதாகி வருகிறது. அதனடிப்படையில் தமிழக அரசும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை புதிதாக தொடங்குவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

தமிழக வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வறட்சியால் நமது மாநிலம் அடிக்கடி பாதிக்கப்படுவதால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. வறட்சியானது ஓர் இயற்கை இன்னல் என்பதால் அதனை தடுக்க முடியாது. ஆனால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பாதிப்பிலிருந்து தப்பலாம்.

வறட்சியானது விவசாயிகளைத் தான் அதிகம் பாதிக்கும். எனவே வறட்சி பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வதற்கு சரியான வழி, வறட்சியைத் தாங்கும் பயிர்களை சாகுபடி செய்வது தான். வறட்சியைத் தாங்கும் நெல் ரகங்களைத் தேர்வு செய்து பயிர் செய்யலாம். கம்பு, துவரை, ஆமணக்கு, கொத்தவரை, மாதுளை, சீத்தா, வில்வம், பனை, கறிவேப்பிலை போன்றவை வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. எனவே வறட்சியான பகுதிகளுக்கு ஏற்றவாறு பயிர் செய்து லாபம் ஈட்டலாம்.

நீர்நிலைகளை தூர்வாரி மழைநீரைத் தேக்குதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்தல், பயன்படுத்திய நீரினை மறு சுழற்சி செய்து பயன்படுத்துதல், உள்நாட்டில் உள்ள அதிக நீர்வளமுள்ள நதியினை நீர்வளம் குறைவாக உள்ள நதியுடன் இணைத்தல் வறட்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதன் மூலம் வறட்சியை வெல்ல முடியும் என்பதால் அந்தப்பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்.

தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித்தவிக்கும் தமிழகத்தில் கடல் நீரை குடிநீராக்குவதற்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, ஓசூர், மதுரை, கடலூர், தூத்துக்குடி ஆகியவை தொழில் நகரங்களாக இருக்கின்றன.

இதில் சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்களின் குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற்சாலை தேவைக்காக கடல் நீரை பயன்படுத்தலாம்.

அதேபோல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் விவசாய தேவைக்கும் கடல் நீரை பயன்படுத்தலாம். இதன் மூலம் காவிரியை நம்பி மட்டுமே விவசாயம் என்கிற நிலையும் மாறும்.

உப்பு நீர் என்ற தயக்கம் விவசாயிகள் மத்தியில் கொஞ்சம் இருக்கிறது. ‘திட்டமிட்ட சாகுபடிக்கு’, கடல் நீர் மிகுந்த பயனுள்ள வகையில் எப்போதும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. கடல் நீரை குடிநீராக பயன்படுத்துவது மட்டும் அல்லாது விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள்

பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

உலகின் பல்வேறு நாடுகள் குடிநீர் பிரச்சினையில் சிக்கியுள்ள இந்த காலகட்டத்தில், கடல் நீரை குடி நீராக மாற்றுவதற்கான நவீன வழிகளை உருவாக்க தொடங்கி உள்ளோம். மழையை மட்டும் நம்பினால் வரும் காலங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியாது என்ற நிலையில், இனி கடலில் மட்டும் தான் போதுமான அளவிற்கு தண்ணீர் உள்ளது என்ற நிலைமை வந்து கொண்டிருக்கிறது. இந்த முறையைத்தான் மத்திய கிழக்கு பகுதியிலுள்ள ஏராளமான நாடுகள் பயன்படுத்துகின்றன.

நானோ தொழில்நுட்ப முறைப்படி கடல் தண்ணீரை வெகு விரைவாக சுத்திகரிக்க முடியும். உலகெங்கும் பல நாடுகளில் குடிதண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கடல்நீர் நானோ தொழில் நுட்ப முறையில் சுத்திகரிப்படுகிறது. இந்த முறையை நாங்களும் கடைப்பிடிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளோம்.

2,400 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு.350) கிரேக்க மேதை அரிஸ்டாடில் கடல்நீரைச் சுவைநீராக்க முயன்றதாக வரலாற்று செய்திகள் மூலம் அறியப்படுகிறது. கிரேக்க கப்பல் மாலுமிகள் கடல்நீரில் உள்ள உப்பை நீக்கிக் குடிநீராக்கி உபயோகித்து வந்திருக்கிறார்கள். 1957-ம் ஆண்டு அரபு நாடான குவைத்தில் கடல் நீரை குடிநீராக்கும் முதல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1965-ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் நிறுவப்பட்டது. 2000-ம் ஆண்டில் உலக நாடுகள் 600 கோடி காலன் கடல் நீரை குடிநீராக்கி பயன்படுத்தி வந்தது.

கடந்த 2004-ம் ஆண்டு சுமார் 7 ஆயிரத்து 500 கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் உலகம் முழுவதும் தொடங்கப்பட்டன. தற்போது இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்திருக்க கூடும். அவற்றில் 60 சதவீத நிலையங்கள் மேற்காசிய நாடுகளில் நிறுவப்பட்டு உள்ளன.

உலகம் வெப்பமயமாவதால் இமயமலையிலும் பனிமலைகள் உருகத்தொடங்கி இருப்பதால், வடமாநில நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்து கடலில் கலந்துகொண்டு இருக்கிறது. கடல்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்தால் கடலோர நகரங்கள் மூழ்கும் அபாயமும் ஏற்படும்.

இந்த சூழ்நிலையில் கடலில் கலக்கும் உபரி நீரை மிகுதியான அளவில் நாம் பயன்படுத்திக்கொள்வதன் மூலம், கடல் நீர் மட்டத்தை கட்டுப்படுத்தி வைக்கவும் முடியும். கடலோர நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தை குறைக்கவும் முடியும். நிலத்தடி நீரின் உபயோகத்தை குறைக்கவும் முடியும். இதன் மூலம் தமிழகத்தை துரத்தும் வறட்சியை போக்குவதுடன், தாகத்தையும் முழுமையாக தீர்க்க முடியும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை, மாமல்லபுரம், மரக்காணம், கல்பாக்கம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், வேதாரண்யம், மனோரா, மீமிசல், தேவிபட்டினம், ராமேசுவரம், கீழக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், விஜயாபதி, மகேந்திரகிரி, கன்னியாகுமரி, வட்டக்கோட்டை, இரணியல் போன்ற பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களை பெரிய அளவில் ஏற்படுத்த வேண்டிய நிலையில் இப்போது தமிழகம் இருந்து வருகிறது. இதனை செயல்படுத்தி, தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

நாட்டில் நீர்ப் பற்றாக்குறை மற்றும் தண்ணீர் பிரச்சினைகளை போக்க ஜீவ நதிகளை, தண்ணீரே இல்லாமல் ஆண்டு கணக்கில் வறண்டு கிடக்கும் நதிகளுடன் இணைக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் ஓடும் நதிகளின் நீரை, அண்டை மாநிலத்தில் வறண்டு கிடக்கும் நதிகளுக்குப் பங்கீடு செய்ய அரசுகள் முன்வர வேண்டும். கடற்கரை பகுதிகளில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்க வேண்டும் இந்த இமாலயத் திட்டங்களை நிறைவேற மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்