இறைச்சிக்காக மாடுகளை கொல்வதற்கு தடை: தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது

இறைச்சிக்காக மாடுகளை கொல்வதற்கு மத்திய அரசு தடை விதித்து இருப்பது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2017-05-30 22:30 GMT

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில், கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இறைச்சிக்காக மாடுகளை கொல்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது. இதனை கண்டித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பல மாநில முதல்வர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர். தி.மு.க.வும் இதை எதிர்க்கிறது. உணவு என்பது தனிமனிதனின் அடிப்படை உரிமை. மத்திய அரசோ, ஒரு மாநில அரசோ இதில் தலையிட்டு உரிமைகளை பறித்து கொள்வது என்பது நிச்சயமாக கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசின் நிலைப்பாடு

இந்த பிரச்சினையில் தமிழக அரசு எந்த நிலைப்பாடும் எடுத்து கொள்ளாத நிலையில் உள்ளது. இதில் என்ன நிலைப்பாடு அவர்கள் எடுக்கப்போகிறார்கள்?. தமிழகத்தில் ஆட்சியை காப்பாற்றி கொள்வது மட்டுமே, அவர்களுடைய நிலைப்பாடாக உள்ளது.

தி.மு.க. தலைவரின் வைரவிழா அழைப்பிதழில் எனது பெயர் இல்லை என்பது ஒரு வி‌ஷயம் அல்ல. நான் ஒன்றும் தேசிய தலைவர் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்