டாஸ்மாக் கடையை முற்றுகையிட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

திருமானூர் அருகே திருமழபாடியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-05-30 22:45 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமழபாடி கடைவீதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையால் அப்பகுதியில் வசிப்போருக்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறி கடந்த 7-ந் தேதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடவலியுறுத்தி கடையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, 8-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் திருமழபாடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆனாலும் திருமழபாடியில் இருந்த டாஸ்மாக் கடை தொடர்ந்து இயங்கி வந்தது.

முற்றுகையிட வந்ததால் பரபரப்பு

இந்நிலையில், நேற்று திருமழபாடி பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அக்கடையை முற்றுகையிட திரண்டு வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், கலால் தாசில்தார் கோவிந்தராஜ், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் ஆகியோர் முற்றுகையிட வந்த பொதுமக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் இந்த டாஸ்மாக் கடை செயல்படாது என்று தெரிவித்ததை அடுத்து டாஸ்மாக் கடையை முற்றுகையிடாமல் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்