திருவள்ளூர் அருகே கூலி தொழிலாளி குத்திக்கொலை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் அருகே கூலி தொழிலாளியை கத்தியால் குத்திக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-05-30 21:55 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்தவர் மூர்த்தி. தொடுகாடு கிராமத்தில் பழைய இரும்பு கடை மற்றும் பேப்பர் கடை வைத்து நடத்தி வருகிறார். அதில் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சைமன் (வயது 40) கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சைமன் கடையில் இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த சைமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்ததும் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, துணை சூப்பிரண்டு புகழேந்தி, இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்–இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், தேவராஜூலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சைமனின் உடலை மப்பேடு போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு விரல் ரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சைமனை கொலை செய்தது யார்? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பெண் விவகாரமா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்