8 பேர் கும்பல் வெட்டிய வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மகன்களை கொலை செய்ய சதி

வீட்டில் புகுந்து 8 பேர் கும்பல் வெட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது மகன்களை கொலை செய்ய சதி நடப்பதாக முன்னாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் தாய், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தார்.

Update: 2017-05-30 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளராக இருந்தவர் சரவணன் (வயது 37). இவருடைய தம்பி சுருளி (30). இவர்கள் அருகருகே வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இரவு சாமல்பட்டி அம்பேத்கர் காலனியில் உள்ள தனது வீட்டில் சுருளி இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜிம் மோகன் (35) என்பவர் உள்ளிட்ட 8 பேர் அரிவாள், கம்புகளோடு வீட்டிற்குள் புகுந்து சுருளியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

அவர்களின் சத்தம் கேட்டு அங்கே வந்த சரவணன், சுருளியின் மனைவி மங்கை (28) ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரும் தற்போது சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக ஊத்தங்கரை சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜிம் மோகன் உள்பட 8 பேரையும் தேடி வருகிறார்கள்.

போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்

இந்த நிலையில் நேற்று சரவணன், சுருளி ஆகியோரின் தாய் வேடியம்மாள் தனது உறவினர்களோடு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாரிடம் புகார் மனுவை கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது மகன்கள் சரவணன், சுருளி, மருமகள் மங்கை ஆகியோர் கடந்த 28-ந் தேதி இரவு வீட்டில் இருந்து போது, அதே பகுதியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான ஜிம் மோகன், வெற்றிவேல், சித்திரைபாண்டியன், தினேஷ், வேடி, சாம்ராஜ், சுரேஷ், மணிவண்ணன் மற்றும் அடையாளம் தெரியாத 3 பேர் சேர்ந்து அரிவாளால் எனது மகன்கள் மற்றும் மருமகளை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் உயிருக்கு போராடியவாறு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிகிச்சை பெறும் எனது மகன்களை ஜிம் மோகன் கூலிப்படையினரை கொண்டு மருத்துவமனையிலேயே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் என்னையும், எனது உறவினர்களையும் கொலை செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.

பாதுகாப்பு அளியுங்கள்

எனவே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எனது மகன்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும், ஊரில் உள்ள எங்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும், எனது மகன்களை கொலை செய்ய முயற்சி செய்த ஜிம் மோகன் உள்ளிட்டோரை கைது செய்திடவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்