நாகசந்திரா–எலச்சனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் சேவை சித்தராமையா அறிவிப்பு

பெங்களூருவில் நாகசந்திரா–எலச்சனஹள்ளி இடையே மெட்ரோ ரெயில் சேவை ஜூன் மாதத்தில் தொடங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார்.

Update: 2017-05-30 23:00 GMT

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி சார்பில் ரூ.14.65 கோடியில் ராஜாஜிநகர் டாக்டர் ராஜ்குமார் ரோட்டில் விவேகானந்தா கல்லூரி அருகே ஒரு சுரங்க பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, அந்த சுரங்கப்பாதையை தொடங்கி வைத்து பேசியதாவது:–

பெங்களூருவில் ரூ.13 ஆயிரத்து 600 கோடி செலவில் 42.3 கிலோ மீட்டர் நீளம் கொண்ட முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் முடிந்துள்ளன. இதில் பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரை மெட்ரோ ரெயில் சேவை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. இப்போது நகரின் வடக்கு–தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் நாகசந்திரா முதல் எலச்சனஹள்ளி வரை சுமார் 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது.

மெட்ரோ ரெயில் சேவை

அந்த பாதையில் மெட்ரோ ரெயில் சேவை ஜூன் மாதத்தில் தொடங்கி வைக்கப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு குறையும். ரூ.26 ஆயிரத்து 500 கோடி செலவில் 2–ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சர்வதேச விமான நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் வசதியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அரசு போக்குவரத்து பஸ்களை பயன்படுத்த வேண்டும்.

பெங்களூரு நகருக்கு புதிதாக 3,000 பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்க உள்ளதால் வளர்ச்சி பணிகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேம்பாலம், சுரங்க பாலம், நடை மேம்பாலம் போன்றவற்றை அதிகளவில் நிறுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலிவு விலை உணவகம்

பெங்களூருவில் மலிவு விலையில் உணவு வழங்க இந்திரா உணவகம் ஆகஸ்டு 15–ந் தேதி தொடங்கப்படும். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பெங்களூருவின் வளர்ச்சிக்காக ரூ.8,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பை திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு மட்டும் ரூ.800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏராளமான வளர்ச்சி பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த விழாவில் பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ், மேயர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்