பாம்பு, தவளை, எலி கறி அனுப்ப முயன்ற இந்து முன்னணியினர் 10 பேர் கைது

திருச்சி தலைமை தபால் அலுவலகத்தில் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு பாம்பு, தவளை, எலி கறி அனுப்ப முயன்ற இந்து முன்னணியினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-06-07 23:00 GMT
திருச்சி,

இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மாட்டிறைச்சி பார்சல் அனுப்ப முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியினர் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

பார்சல் அனுப்ப முயற்சி

இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்ட இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய தடை உத்தரவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தி.க. தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோருக்கு பாம்பு மற்றும் தவளை, எலி கறியை பார்சலில் அனுப்ப போவதாக கூறி திருச்சி தலைமை தபால் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

10 பேர் கைது

தலைமை தபால் அலுவலக வாசலில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்காததால் பாம்பு மற்றும் தவளை, எலி கறி இருந்த பார்சலை பிரித்து காட்டி போலீசாருக்கு எதிராக கோஷம் போட்டனர். இதனை தொடர்ந்து அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்