கூடலூரில் பணிபுரியும் அரசு பள்ளியில் மகளை முதல் வகுப்பில் சேர்த்த ஆசிரியர்

கூடலூரில் தான் பணியாற்றும் அரசு பள்ளியிலே ஆசிரியர் ஒருவர், தன்னுடைய மகளை சேர்த்தார்.

Update: 2017-06-08 22:00 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் 2-வது மைல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் அருண்குமார். இவரது மனைவி நித்யா. இவரும் அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட சிறப்பு ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு பியானி (வயது 5), ஆதினி (2½) ஆகிய மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பியானிக்கு 5 வயது நிரம்பி விட்டதால் தான் பணியாற்றும் அரசு பள்ளியிலேயே படிக்க வைக்க நினைத்தார். இந்த நிலையில் நேற்று காலை குடும்பத்துடன் பள்ளிக் கூடத்துக்கு வந்தவர், முறைப்படி பள்ளி தலைமை ஆசிரியையிடம் விண்ணப்பித்து, தனது மகள் பியானியை முதல் வகுப்பில் சேர்த்தார். இது குறித்து ஆசிரியர் அருண்குமார் கூறியதாவது:-

ஏற்ற தாழ்வு மறையும்

நானும் எனது மனைவியும் அரசு ஆசிரியர்களாக உள்ள நிலையில் எனது குழந்தைகளை தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்க்க விரும்ப வில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும்.

அப்போது தான் அரசு பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை வரும். மேலும் சமுதாயத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளும் மறையும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

அரசு பள்ளிக்கூடங்களும் அதிகளவு உருவாகும். இதன் மூலம் படித்து முடித்து விட்டு ஆசிரியர் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். மேலும் அரசு பள்ளிக்கூடங்களில் கல்வியின் தரம் இன்னும் உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்