திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிட ஒப்பந்ததாரர் குடும்பத்தினருடன் தர்ணா

திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் மேலசீதேவிமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் அன்புராஜ். கட்டிட ஒப்பந்ததாரர்.

Update: 2017-06-09 21:45 GMT
திருச்சி,

இவர் நேற்று மதியம் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த செசன்சு கோர்ட்டு போலீசார் கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அன்புராஜ் போலீசாரிடம் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னை 2 நபர்கள் சேர்ந்து அரிவாளால் தலையில் வெட்டினர். மேலும் அந்த 2 நபர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவர் எனது மகள்களை தாக்கினார்.

 இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரை அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். பின்னர் போலீசார், கலெக்டரை சந்திக்க அன்புராஜூக்கு அனுமதி வாங்கி கொடுத்தனர். இதையடுத்து அன்புராஜ் மேற்கண்ட சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜாமணியிடம் மனு கொடுத்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறியதை தொடர்ந்து அன்புராஜ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்