ராசிபுரம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லாத அரசு பஸ் சிறைபிடிப்பு

ராசிபுரம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்லாத அரசு பஸ்சை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-21 22:00 GMT

ராசிபுரம்,

ராசிபுரம் தாலுகா கார்கூடல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மெட்டாலா மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 மாணவ, மாணவிகள் கார்கூடல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் மெட்டாலாவில் இருந்து ராஜாபாளையத்திற்கு அரசு பஸ்சில் தினந்தோறும் பள்ளிக்கு சென்று வந்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்புவதற்காக மெட்டாலாவைச் சேர்ந்த 7–ம் வகுப்பு மாணவிகளான பழனிசாமி மகள் பூமிகா (வயது 11), சாம் மகள் ரூபிகா (12) ஆகியோர் பஸ்சுக்காக காத்து இருந்தனர். அப்போது தம்மம்பட்டியில் இருந்து ராசிபுரத்திற்கு சென்ற அரசு பஸ் ராஜாபாளையத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் சென்றது. அப்போது மாணவிகள் பூமிகா, ரூபிகா ஆகியோர் அந்த பஸ்சில் ஏற முற்பட்டதாகவும், அவர்கள் பஸ்சில் ஏறுவதற்கு முன்பாக பஸ்சை டிரைவர் இயக்கியதால் அவர்கள் கீழே தவறி விழுந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறைபிடிப்பு

இதனிடையே மாணவிகள் ஏறுவதற்குள் அரசு பஸ்சை டிரைவர் இயக்கியதால் மாணவிகள் கீழே விழுந்து விட்டதாக கூறி இதற்கு காரணமான பஸ்சின் டிரைவர் செல்வகுமார், கண்டக்டர் சுப்பிரமணி ஆகியோரை கண்டித்து அந்த பகுதியைச் சேர்ந்த மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் நேற்று காலையில் தம்மம்பட்டியில் இருந்து ராசிபுரத்திற்கு வந்த அதே அரசு பஸ்சை மெட்டாலாவில் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் நேற்று அந்த பஸ்சில் சம்பந்தப்பட்ட கண்டக்டர் மற்றும் டிரைவர் வரவில்லை. சிறை பிடிக்கப்பட்ட அரசு பஸ் தம்மம்பட்டி டெப்போவைச் சேர்ந்தது. அரசு பஸ் கண்டக்டர் சுப்பிரமணி அரசு பள்ளி மாணவ, மாணவிகளை பஸ்சில் ஏற்றிச்செல்ல மறுப்பதாகவும், அதையும் மீறி ஏறுபவர்களை தகாத வார்த்தைகளால் அவர் திட்டுவதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

பரபரப்பு

இதுகுறித்து பலமுறை பஸ்சின் கண்டக்டரிடம் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தும், தொடர்ச்சியாக இதுபோன்ற செயலில் அரசு பஸ்சின் கண்டக்டர் ஈடுபடுவதாக அவர்கள் புகார் கூறினர். இதுபற்றி தகவல் அறிந்த ஆயில்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் திலகவதி மற்றும் போலீசார், ராசிபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் காங்கேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இனிவரும் காலங்களில் பள்ளி மாணவ, மாணவிகளை அரசு பஸ்சில் ஏற்றி வர அரசு பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டர்களிடம் எடுத்துச்சொல்லி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும், பொதுமக்களும் கலைந்து சென்றனர். அரசு பஸ் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மெட்டாலாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்