பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

திருவாரூர் அருகே பயிர் காப்பீட்டுக்தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-06-21 22:15 GMT

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2015–16–ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திருவாரூர், கொராடச்சேரி, நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீடு தொகை வழங்கக்கோரி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருவாரூர் அருகே உள்ள சோழங்கநல்லூர் கடைவீதியில் செருகுடி, ஆமூர், வைப்பூர், நடப்பூர் ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், தாசில்தார் சண்முகவடிவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்ததை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் திருவாரூர்–நாகூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்