கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டக்கோரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் மனிதசங்கிலி போராட்டம்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டக்கோரி காட்டுமன்னார்கோவில் அருகே ஆற்றில் இறங்கி கடலூர், நாகை மாவட்டத்தை சேர்ந்த பாசன விவசாயிகள் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.

Update: 2017-06-21 23:15 GMT

காட்டுமன்னார்கோவில்,

காவிரி ஆற்றின் துணை ஆறாகவும், அந்த ஆற்றின் வடிகாலாகவும் இருப்பது கொள்ளிடம் ஆறு. இந்த ஆற்றின் மூலம் டெல்டா பாசன பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றில் மழைவெள்ள காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் நீரை சேமிக்க கதவணைகள் இல்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் மழைநீரை ஆற்றில் சேமித்து வைக்க முடியாமல் வீணாக கடலில் கலந்து வருகிறது. எனவே, கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்ட வேண்டும் என்று பொது மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மனித சங்கிலி போராட்டம்

இந்த நிலையில், கடந்த 2014–ம் ஆண்டு தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ம.ஆதனூருக்கும், நாகை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடியில் கதவணை கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், இதுவரை அந்த பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.

இதனை கண்டித்து விவசாய சங்கத்தினர் பலகட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று கொள்ளிடம் கீழணை பாசன சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் கடலூர், நாகை ஆகிய 2 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் இறங்கினர். பின்னர், அனைவரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பொது மக்கள் கடும்வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களது கோரிக்கைகளை முழங்கியவாறு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல்–அமைச்சர் வீடு முற்றுகை

இது குறித்து கொள்ளிடம் கீழணை பாசன சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறியதாவது:–

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது கொள்ளிடம் ஆறு. கடலூர், நாகை மாவட்ட விவசாயிகள் மட்டும் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றனர். இந்த நிலையில், 4.8.2014 அன்று ம.ஆதனூருக்கும், நாகை மாவட்டம் குமாரமங்கலத்துக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்டு பணி தொடங்காமல் உள்ளது.

இதனை கண்டித்து நாங்கள் இன்று(அதாவது நேற்று) மனிதசங்கிலி போராட்டம் நடத்தி உள்ளோம். கடந்த 2005–ம் ஆண்டு பெய்த கன மழையின் போது சுமார் 4 லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆறு மூலம் வீணாக கடலில் கலந்தது. அந்த தண்ணீரை சேமித்து வைத்திருந்திருந்தால் வறட்சி ஏற்பட்டிருக்காது.

இதுபோல ஒவ்வொரு மழையின் போது மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது. எனவே, வருகிற 28–ந் தேதி தமிழக சட்டசபையில் நடைபெறும் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையில் இந்த கதவணையை உடனடியாக கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்–அமைச்சரிடம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளை சேர்ந்த 5 எம்.எல்.ஏக்களும் வலியுறுத்த வேண்டும். இல்லாவிடிவில் 30–ந் தேதி தமிழக முதல்–அமைச்சர் வீடு மற்றும் 5 எம்.எல்.ஏ.க்கள் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்