கர்நாடக அரசை போல் தேசிய வங்கிகளில் விவசாய கடனை பிரதமர் தள்ளுபடி செய்ய வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

கர்நாடக அரசைப்போல் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை பிரதமர் நரேந்திர மோடி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Update: 2017-06-21 20:00 GMT

பெங்களூரு,

கர்நாடக அரசைப்போல் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை பிரதமர் நரேந்திர மோடி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக அரசின் விவசாய கடன் தள்ளுபடி குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

சித்தராமையாவுக்கு பாராட்டு

கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக கர்நாடக காங்கிரஸ் அரசு, அவர்களின் விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதற்காக முதல்–மந்திரி சித்தராமையாவுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.

விவசாயிகளின் நலன் கருதி முன்பு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது ரூ.72 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோடிக்கு அழுத்தம் கொடுத்து...

கர்நாடக பா.ஜனதா தலைவர்களான எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், ஈசுவரப்பா ஆகியோர் பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுத்து, தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சி நிவாரண நிதியும் கர்நாடகத்திற்கு குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு அதிகளவில் நிதி வழங்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. இருந்தபோதிலும், விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் கர்நாடக அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்