பைகுல்லா ஜூலா மைதானத்தில் சுரங்க வாகன நிறுத்துமிடம் அமைகிறது

மும்பை பெருநகரில் தற்போதைய நிலவரப்படி சுமார் 30 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆனால் அவற்றை நிறுத்தி வைப்பதற்கு போதிய இடவசதி இருக்கிறதா? என்றால் பதில் கேள்விக்குறி தான்.

Update: 2017-06-21 22:30 GMT
மும்பை பெருநகரில் தற்போதைய நிலவரப்படி சுமார் 30 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆனால் அவற்றை நிறுத்தி வைப்பதற்கு போதிய இடவசதி இருக்கிறதா? என்றால் பதில் கேள்விக்குறி தான்.

பெரும் பிரச்சினை

வாகனங்களை நிறுத்துவதற்கு இடமின்மை காரணமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை ஓட்டி வருபவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சாலையோரத்தில் நிறுத்தி வைத்து விடுகிறார்கள். அவர்கள் போக்குவரத்து நெருக்கடியை பற்றியோ, மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றோ கவலைப்படுவது கிடையாது. தங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் கிடைத்தால் போதும் என்று மட்டும் கருதுகின்றனர்.

மும்பையில் பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் இல்லை. எனவே அவர்கள் சாலையோரங்களிலேயே தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்து விடுகிறார்கள். சில இடங்களில் நடைபாதையில் கூட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் அவலமும் நடக்கிறது. அவ்விடங்களில் நடந்து செல்ல வழியின்றி பொதுமக்கள் சாலையில் செல்கின்றனர். இதனால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

மும்பையில் வாகன நிறுத்தம் என்பது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.

சுரங்க வாகன நிறுத்தம்

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மாநகராட்சி சுரங்க வாகன நிறுத்தத்தை அமைக்கும் திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது. இந்த சுரங்க வாகன நிறுத்தம் நகரில் முதல் முறையாக பைகுல்லாவில் அமைய இருக்கிறது. அங்குள்ள ஜூலா மைதானம் தான் அதற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. ஜூலா மைதானத்தின் கீழே பூமிக்கடியில் இந்த சுரங்க வாகன நிறுத்தம் அமைய இருக்கிறது.

இந்த சுரங்க வாகன நிறுத்தம் பூமிக்கடியில் தரைதளம் மற்றும் மேல்தளம் என இரண்டு அடுக்குகளாக அமைக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு தளத்திலும் 350 வாகனங்களை நிறுத்தி வைக்கும் வகையில் இந்த சுரங்க வாகன நிறுத்தம் உருவாகிறது.

பொதுமக்கள் எதிர்ப்பு

பூமிக்கடியில் வாகன நிறுத்தம் என்பது முன்னோடி திட்டம் என்றாலும் கூட, அது அமைவதற்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள இடம் பல்வேறு தரப்பினரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்து உள்ளது. சுரங்கத்தில் வாகன நிறுத்தம் அமைக்கப்படுவதால் ஜூலா விளையாட்டு மைதானத்திற்கு பாதிப்பு உண்டாகும் என்பதே அவர்களின் வேதனையாக இருக்கிறது.

இதுபற்றி அப்பகுதி கவுன்சிலர் கீதா காவ்லி கூறுகையில், “மாநகராட்சி அதிகாரிகள் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன் பொதுமக்களின் கருத்தையும் கேட்கவேண்டும். ஜூலா மைதானம் ஒரு திறந்தவெளி உடற்பயிற்சி கூடமாகும். இந்த மைதானம் பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரியது. இதன் அமைப்பு மாறி விடக்கூடாது. சுரங்க வாகன நிறுத்தத்தை பராமரிப்பதற்கு என்றே அதிக தொகை செலவிட வேண்டி இருக்கும். மேலும் பைகுல்லாவில் வசிக்கும் பொதுமக்களில் பெரும்பாலானோர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் வாகனத்தை சுரங்க வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைத்துவிட்டு, அதற்கான கட்டணத்தை செலுத்துவது கடினம். இது தொடர்பாக நான் மாநகராட்சி கமிஷனரை சந்தித்து பேசியிருக்கிறேன்” என்றார்.

அதிகாரி விளக்கம்

இதுபற்றி மாநகராட்சி உதவி கமிஷனர் கிஷோர் தேசாயிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

சுரங்க வாகன நிறுத்தம் அமைய உள்ளதால் ஜூலா மைதானம் மேம்படுத்தப்படும். இந்த மைதானம் விளையாட்டு அரங்கமாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் பயனடைவார்கள். சுரங்க வாகன நிறுத்தம் அமைவதன் மூலம் சுற்றுப்புறத்தில் உள்ள சாலையோரங்களிலும், தெருக்களிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவது பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.

சுரங்க வாகன நிறுத்தம் அமைப்பதற்கான டெண்டர் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இந்த பணிக்காக மாநகராட்சி பட்ஜெட்டிலேயே ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. எனவே சுரங்க வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்