மகன் இறந்த சோகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தூக்குப்போட்டு தற்கொலை

மகன் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்த மத்திய குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-06-23 23:00 GMT
செங்குன்றம், 

சென்னையை அடுத்த கொளத்தூர் வெற்றி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 54). இவர், மத்திய குற்றப்பிரிவு போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு சமீப காலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதமாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ விடுப்பு முடிந்து கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் வேலைக்கு சென்றார்.

மகன் இறந்த சோகம்

ராமகிருஷ்ணனின் மூத்த மகன், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மாதவரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். மகன் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்ததாலும், உடல் நலக்குறைவு காரணமாகவும் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் சாப்பிட்டு விட்டு தனது அறையில் சென்று படுத்து தூங்கினார். நேற்று காலை அவருடைய மனைவி ஜெயந்தி, அவரது அறைக்கு சென்று பார்த்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அங்கு, ராமகிருஷ்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தற்கொலை செய்த ராமகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்