பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதம்

Update: 2017-06-24 22:30 GMT

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நொச்சிபாளையம்–அவரப்பாளையம் பிரிவில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை திறப்பதாக தகவல் பரவியது. இந்த டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி பொதுமக்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்து இருந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடை திறக்க விடமாட்டோம் என்றும் பொதுமக்கள் கூறினார்கள். பின்னர் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் சாலையின் ஓரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம், டாஸ்மாக் திருப்பூர் மாவட்ட மண்டல மேலாளர் துரை வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் கூறியதை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன்பின்னர் டாஸ்மாக் அதிகாரி அங்கிருந்து சென்று விட்டார். ஆனாலும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து ஈடுபட்டனர். அப்போது பெண்கள் தாலியை காப்பாற்று என கோ‌ஷமிட்டு மஞ்சள் கட்டி தயாராக கையில் வைத்திருந்த மஞ்சள் நிற கயிறுகளை ரோட்டில் வீசி எறிந்து விட்டு நேற்றுமுன்தினம் காலை முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் சாலை ஓரம் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலை 18 ஆண்களும், 20 ஆண்களும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி நொச்சிப்பாளையம்– அவரப்பாளையம் பிரிவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்