களக்காடு தலையணை இன்று முதல் திறப்பு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி

களக்காடு தலையணை இன்று முதல் திறக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

Update: 2017-06-27 21:00 GMT

களக்காடு,

களக்காடு தலையணை இன்று முதல் திறக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

தலையணை இன்று திறப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் கடந்த மே 1–ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் தலையணை செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 2 நாட்களாக களக்காடு பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் தலையணையில் தண்ணீர் வரத்து தொடங்கி நேற்று முதல் அதிகரித்தது.

இதனைதொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகானந்தம் உத்தரவின் பேரில் இன்று (புதன்கிழமை) முதல் திறக்கப்படும் என்று களக்காடு வனசரகர் (பொறுப்பு) புகழேந்தி தெரிவித்தார். இதனால் தலையணை திறப்புக்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை வனசரகர் புகழேந்தி பார்வையிட்டார்.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படும், என்றும், அதற்கான பாதுகாப்பு பணியில் வேட்டை தடுப்புக் காவலர்கள் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தலையணையில் இருந்து வரும் தண்ணீர் குளங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தால்தான் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். தலையணைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் உள்பட தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்