தென்மேற்கு பருவமழை தீவிரம் அணைகளின் நீர் மட்டம் கிடுகிடு உயர்வு

இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு, பூங்கா நகரம், குளு,குளு நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவிற்கு தினமும் கல்வி, வேலைவாய்ப்பு தேடி ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.

Update: 2017-06-27 23:30 GMT

ந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு, பூங்கா நகரம், குளு,குளு நகரம் என அழைக்கப்படும் பெங்களூருவிற்கு தினமும் கல்வி, வேலைவாய்ப்பு தேடி ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். தற்போது பெங்களூருவில் ஒரு கோடி மக்கள் வசிப்பதாக தகவல் தெரிவிக்கிறது. இங்கு வாழும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக கிருஷ்ணசாகர் (கே.ஆர்.எஸ்.) அணை, கபினி அணை, ஹாரங்கி அணை திகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தில் பருவழை பொய்த்ததால் பல மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் பூஜ்ஜிய அளவை எட்டியது. இதனால் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதேபோல் இந்த ஆண்டு பருவழை பொய்த்தால் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடும் வறட்சி ஏற்பட்டது. எனவே மாநிலத்தில் உள்ள 133 தாலுகாக்களை அரசு வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்தது. மேலும் வறட்சி பாதித்த பகுதிகளில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வறட்சி நிதியை அரசு அறிவித்தது. அந்த நிதியை கொண்டு மாவட்ட நிர்வாகம் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்து மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

எனவே மாநில மக்கள் குடிநீர் தேவைக்கு கோடைக்கு பிறகு பெய்யும் பருவமழையை நம்பி இருந்தனர். மேலும் மழை வேண்டி பல இடங்களில் யாகம், தவளைகளுக்கு திருமணம், கழுதைகளுக்கு திருமணம், புதைத்த தொழு நோயாளிகளின் உடல்களை தோண்டி எடுத்து எரிப்பு, புதைத்த உடலை தோண்டி எடுத்து அவர்களின் முடி, மற்றும் பற்கள் எரிப்பு என பல வினோத பூஜைகளை கிராம மக்கள் செய்தனர். மாநில அரசும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க செயற்கை மழை பெய்ய வைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக குடகு மாவட்டத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மேலும் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் கே.ஆர்.எஸ். எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு செல்கிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களில் மட்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் கனமழையால் கே.ஆர்.எஸ். அணைக்கு 2 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி என்பது 100 கோடி கன அடி) தண்ணீர் வந்து உள்ளது. நேற்று முன்தினம் மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 997 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,078 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 124.80 அடி நீர்மட்டம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 67.62 அடி தண்ணீர் உள்ளது.

இதேபோல் சிவமொக்கா மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அந்த மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் லிங்கனமக்கி, பத்ரா அணைக்கு நீர் வரத்தொடங்கி உள்ளது. லிங்கனமக்கி அணைக்கு நேற்று முன்தினம் நிலவரப்படி வினாடிக்கு 12,414 கன அடிநீரும், பத்ரா அணைக்கு வினாடிக்கு 2,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 194 அடி நீர்மட்டம் கொண்ட பத்ரா அணையில் தற்போது 113.10 அடி தண்ணீரும், 193 அடி நீர்மட்டம் கொண்ட லிங்கனமக்கி அணையில் 102.15 கனஅடி நீரும் உள்ளது. இதேபோல் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகாவில் உள்ள ஜூவநதிகளான துங்கா, மாலதி, குஷாவதி நதிகளிலும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

அதேபோல் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள துங்கா அணையின் நீர்மட்டம் 588.24 மீட்டர் ஆகும். தற்போது அணையில் 587.63 மீட்டர் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் அதன் 6 மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதேபோல் ஹாரங்கி அணைக்கு 900 கனஅடி நீர் வருகிறது. அதே வேளையில் 10 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்வதாலும், மேலும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதாலும் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்