அரசு, தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தக்கோரி வழக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்தக்கோரிய வழக்கு குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
மதுரை,
ராமநாதபுரத்தை சேர்ந்த பாபுஅப்துல்லா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் தமிழக மாணவர்கள் குறிப்பிடப்படும்படியான இடத்தை பிடிக்கவில்லை. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் கூட நீட் தேர்வில் ஜொலிக்கவில்லை.
இதற்கு முக்கிய காரணம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது தான். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்காரணமாக அந்த மாநில மாணவர்கள் நீட் தேர்வில் எளிதாக வெற்றி பெற்றுள்ளனர்.
குறிப்பாக கேரளாவில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கேரள மாணவர்கள் தேசிய தகுதித்தேர்வுகளில் எளிதாக ஜெயித்து வருகின்றனர். கல்வித்துறையில் முதல் இடத்தை அந்த மாநிலம் பிடிக்க இதுவும் ஒரு காரணம். தமிழக பாடத்திட்டங்கள் தேசிய அளவிலான பாடத்திட்டங்களுடன் ஒப்பிடும்படியாக இல்லை.
எனவே நீட் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளுக்கு மாணவர்கள் தகுதி அடைய, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இந்த மனு குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 24–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.