கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்

கதிராமங்கலத்தில் போராட்டம் நடத்தும் கிராம மக்களுக்கு ஆதரவாக, திருச்செங்கோடு அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2017-07-10 22:45 GMT
எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் பஸ் நிறுத்தத்தில் அந்த பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் நேற்று காலையில் திடீரென திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், விவசாயத்தை காக்கவேண்டும், கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், திட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தமிழன்டா என்ற வாசகத்துடன் கூடிய அட்டைகளையும் கைகளில் வைத்திருந்தனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும், திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது தவறு என கூறி மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்கள். இதற்கு மாணவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதனை அடுத்து போலீசாரும், கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவர்களை கட்டாயப்படுத்தி கல்லூரி பஸ்களில் ஏற்றி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தால் குமாரமங்கலம் பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டம் குறித்து கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:-

ஒ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயத்தை வாழ வைக்க வேண்டும். 90 நாட்கள் போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கை சரியானதல்ல. தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்களாகிய நாங்கள் அறவழி போராட்டம் நடத்தினோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்