‘ஜீவசமாதி அடைய அனுமதி தாருங்கள்’ சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.க்கு முருகன் கோரிக்கை மனு

உயிர்வாழ விருப்பம் இல்லாததால் ஜீவசமாதி அடைய அனுமதி தாருங்கள் என்று ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.க்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Update: 2017-07-22 21:30 GMT

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், இதே வழக்கில் அவரின் மனைவி நளினிவேலூர் பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இருவரும் கணவன்– மனைவி என்பதால் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசுவதற்கு சிறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

நளினி சிறையில் அடைக்கப்பட்ட போது 2 மாதம் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்து தற்போது 26 வயதை அடைந்துள்ளார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக பரோல் கேட்டும், விடுதலை கேட்டும் பல ஆண்டுகளாக போராடிய முருகன் தற்போது காவி உடை உடுத்தி, ஜடாமுடி திரித்து சாமியார் போல காணப்படுகிறார்.

இந்த நிலையில் அவர் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிற்கு, ஜெயில் சூப்பிரண்டு சண்முகம் சுந்தரம் வழியாக கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த மனுவில் ஜெயிலில், ஜீவசமாதி அடைய அனுமதி தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து ஜெயில் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘முருகன், பெருமாள் கடவுளை வணங்கி வருகிறார். இந்த நிலையில் அவர் பல ஆண்டுகளாக ஜெயிலில் தனது வாழ்க்கையை கழித்துவிட்டார். விடுதலை கேட்டு பலமுறை போராடியும் அவருக்கு விடுதலை கிடைக்கவில்லை. எனவே, உயிர் வாழ விருப்பம் இல்லாததால் அவர் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.க்கு அனுப்பி உள்ள கடிதத்தில் அடுத்த மாதம் 18–ந் தேதியில் இருந்து உணவு உண்ணாமல் ஜீவசமாதி அடைய போகிறேன். இதற்கு யாரும் இடையூறு செய்ய கூடாது. ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அவர் ஜீவசமாதி அடைவதற்காக உணவு உண்ணாமல் உடலை வருத்துவது சட்டப்படி குற்றம். எனவே, அவருக்கு சிறைத்துறையினர் வலுக்கட்டாயமாக உணவு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்’ என்றார்.

மேலும் செய்திகள்