பழனி திருஆவினன்குடி கோவில் அருகே சேவல் கிடங்கில் பிடிபட்ட 2 நாகபாம்புகள்

பழனி முருகன் கோவிலுக்கு வருகிற பக்தர்கள் தினமும் 15 முதல் 50 சேவல்கள் வரை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

Update: 2017-07-22 20:15 GMT

பழனி

பழனி முருகன் கோவிலுக்கு வருகிற பக்தர்கள், நேர்த்திக்கடனாக சேவல்களை வழங்குவது வழக்கம். அதன்படி தினமும் 15 முதல் 50 சேவல்கள் வரை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். இந்த சேவல்களை பாதுகாக்க, பழனி அடிவாரத்தில் திரு ஆவினன்குடிகோவில் அருகே சேவல் கிடங்கு உள்ளது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்துகிற சேவல்கள், இங்கு கொண்டு வரப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று மதியம் சேவல் கிடங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சேவல் கிடங்குக்கு வந்தார். அங்கு அவர் கண்ட காட்சியால் அதிர்ச்சி அடைந்தார். அதாவது, சேவல் கிடங்குக்குள் 2 நாகபாம்புகள் படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தன. இதுகுறித்து பழனியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நடராஜ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்தார். 3 மணி நேரம் போராடி 2 பாம்புகளையும் உயிருடன் பிடித்தார். அந்த பாம்புகள், சுமார் 5 அடி உயரம் இருந்தன. பின்னர் அவைகள், பழனி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பாம்புகளை, பழனி–கொடைக்கானல் மலைச்சாலையில் 3–வது கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். பாம்புகள் புகுந்த நேரத்தில், சேவல் கிடங்கில் சேவல்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்