‘டெஸ்ட் டியூப்’ மூலம் கர்ப்பம் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண், 2 குழந்தைகள் சாவு

புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணும், அவருக்கு பிறந்த 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2017-07-25 00:15 GMT

புதுச்சேரி,

இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுவை முத்திரையர்பாளையம் வழுதாவூர் சாலையை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது27). இவருடைய மனைவி திவ்யா (24). கணவன், மனைவி இருவரும் என்ஜினீயர். இருவரும் 2½ ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை உருவாவதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. எனவே டெஸ்ட் டியூப் மூலமாக குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்தனர். இதற்கான சிகிச்சையை திவ்யா எடுத்தார். அதையடுத்து அவர் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான திவ்யாவுக்கு நேற்று முன்தினம் மாலையில் பிரசவ வலி ஏற்பட்டது.

உடனே புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் திவ்யாவை பிரசவத்திற்காக உறவினர்கள் அனுமதித்தனர். அவருக்கு, ஆபரே‌ஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. அதையடுத்து அவருக்கு ஆபரே‌ஷன் நடந்தது. இதில் திவ்யாவுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்தன.

இதற்கிடையே சிறிது நேரத்தில் திவ்யாவும், அவருக்கு பிறந்த 2 பெண் குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர். இதனால் அவருடைய உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள், டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் திவ்யாவும், 2 பெண் குழந்தைகளும் இறந்துவிட்டார்கள் என கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் லாஸ்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதையடுத்து திவ்யா மற்றும் அவருடைய குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திவ்யாவுக்கும், விக்னேசுக்கும் திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடக்கிறது.

இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக திவ்யாவின் உறவினர்களும், மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்களும் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங், லாஸ்பேட்டை போலீசார் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் திவ்யாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்