பெண்களிடம் நகை பறித்த கொள்ளையன் சிக்கினான் 20 பவுன் நகை – கார் பறிமுதல்

மாதவரம் பகுதிகளில் திருட்டு காரில் வலம் வந்து பெண்களிடம் நகை பறித்து வந்த கொள்ளையன் சிக்கினான். அவனிடம் இருந்து சொகுசு கார் மற்றும் 20 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார் அவனது கூட்டாளிகள் 7 பேரை தேடி வருகிறார்கள்.

Update: 2017-08-07 22:45 GMT

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. நகை பறிக்கும் நபர்களை பிடிக்க சென்னை போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து மாதவரம் துணை கமி‌ஷனர் கலைச்செல்வன் மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணியம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு மாதவரம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் சென்னை வடபழனி கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்(வயது27) என்பதும் இவர் மாதவரம் பகுதியில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இவரும் இவரது கூட்டாளிகளும் சொகுசு கார்களை திருடி மாதவரம் பகுதியில் நடந்து செல்லும் பெண்களிடம் நகையை பறிப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மாதவரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து கோர்ட்டில் ஆஜார்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

கைதான கண்ணனிடம் இருந்து ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 20 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவரது கூட்டாளிகள் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்