தஞ்சை மாநகராட்சி பகுதியில் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வீடு, வீடாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 4 இடங்களில் சிறப்பு மருத்துவசிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2017-08-07 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையர் வரதராஜ் மேற்பார்வையில் தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 51 வார்டுகளிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி நேற்று 42, 51, 38 ஆகிய வார்டுகளில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை மாநகராட்சி நகர்நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ததோடு, விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். இதில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன், ராமச்சந்திரன், ஜோசப்சேவியர், மோகனபிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிறப்பு மருத்துவமுகாம்

பின்னர் நகர்நல அலுவலர் நமச்சிவாயம் கூறுகையில், “டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் ஒவ்வொரு வார்டாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் கட்டிடங்களில் உள்ள மேற்கூரைகள், சூரிய ஒளி தகடுகள், வீட்டின் முன்பகுதியில் உள்ள சிலாப்புகள் போன்றவற்றில் மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு தண்ணீர் தேங்கினால் அதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் தஞ்சை மாநகரில் சீனிவாசபுரம், கரந்தை, கல்லுக்குளம், மகர்நோன்புச்சாவடி ஆகிய 4 இடங்களில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவமுகாமும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த முகாமில் நிலவேம்பு கசாயமும் வழங்கப்படுகிறது. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”என்றார். 

மேலும் செய்திகள்