குடியாத்தம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

குடியாத்தம் அருகே பொதுமக்கள் வீட்டுமனை கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-08 22:45 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் ஒன்றியம் அக்ராவரம் ஊராட்சி ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அதே பகுதியில் உள்ள கிராம நத்தம் நிலத்தில் வீட்டுமனை வழங்கக்கோரி மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் அக்ராவரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதில் நீண்ட நாட்களாக குடியிருந்தவர்களுக்கு ரங்கசமுத்திரம் கிராம நத்தம் பகுதியில் 3 பேருக்கு வீட்டுமனை பட்டாவை வருவாய் துறையினர் வழங்கினர்.

இந்த நிலையில் ரங்கசமுத்திரம் கிராமமக்கள் தாங்கள் பலமுறை கிராம நத்தம் நிலத்தில் வீட்டுமனை வழங்கக்கோரி மனு அளித்திருந்தும் எங்களுக்கு வழங்காமல் மற்றவர்களுக்கு வழங்கியதை கண்டித்து ஜிட்டப்பல்லியில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் நாகம்மாள், துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் பலராமன், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள், வீட்டுமனை இல்லாத தகுதி வாய்ந்த நபர்களுக்கு ரங்கசமுத்திரம் கிராம நத்தம் பகுதியில் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அரசு பஸ்சை விடுவித்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்