கர்ப்பிணி பெண்களுக்கான இலவச ஆட்டோ சேவை சென்னை வாலிபருக்கு மக்கள் பாராட்டு

சுதந்திர தினத்தையொட்டி, எழும்பூர் அரசு பிரசவ ஆஸ்பத்திரிக்கு வந்த கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் ஆட்டோ இலவசமாக இயக்கப்படும் என்று ஆட்டோ டிரைவர் சுகுமார் அறிவித்தார்.

Update: 2017-08-16 01:15 GMT
சென்னை, 

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுகுமார், சமூகசேவையில் ஈடுபட முடிவெடுத்தார். அதன்படி நேற்று காலை எழும்பூர் அரசு பிரசவ ஆஸ்பத்திரிக்கு வந்த சுகுமார், கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் ஆட்டோ இலவசமாக இயக்கப்படும் என்று அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து கர்ப்பிணி பெண்களை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சுகுமார் தனது ஆட்டோவில் இலவசமாக அழைத்து சென்றார். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் சுகுமார் கூறுகையில், “நாடு சுதந்திரம் அடைந்த தினத்தில் ஏதாவது சமூக சேவை செய்ய விருப்பப்பட்டேன். அதன்படி ஒரு நாள் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் கர்ப்பிணி பெண்களை இலவசமாக அவர்கள் வீட்டுக்கு ஆட்டோவில் அழைத்து செல்ல முடிவு எடுத்தேன்”, என்றார். சமூக சேவையில் ஈடுபடும் நோக்கில் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ இயக்க முன்வந்த சுகுமாருக்கு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, அவர் குணமடைந்து வரவேண்டி நோயாளிகளுக்காக தனது ஆட்டோவை இலவசமாக இயக்கியவர் சுகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்