டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடக்க இருந்த போராட்டம் வாபஸ்

சங்கரன்கோவில் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று நடக்க இருந்த போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.

Update: 2017-08-16 22:15 GMT
சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்– இலவன்குளம் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

இந்த கடையின் அருகே குடியிருப்பு பகுதிகள் அமைந்து உள்ளதால் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த ஜூலை 6–ந் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் இன்னும் ஒரு மாதத்தில் கடை அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அறிவித்து இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அந்த பகுதியில் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் டாஸ்மாக் மேலாளர் அய்யப்பன், இன்ஸ்பெக்டர் அருள், மண்டல துணை தாசில்தார் மைதீன்பட்டாணி, வருவாய் ஆய்வாளர் ஆனந்த், கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாடசாமி, பாலுச்சாமி, அசோக்ராஜ், மாணிக்கம் உள்பட பலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில் வருகிற அக்டோபர் 16–ந் தேதி டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பேரில் நேற்று நடைபெறுவதாக இருந்த காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மேலும் செய்திகள்