கழுத்தை நெரித்து பேராசிரியை படுகொலை பிரேத பரிசோதனையில் கண்டுபிடிப்பு

கோபி அருகே பேராசிரியை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-08-20 23:30 GMT

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குருமந்தூர் ஆயிபாளையத்தை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (வயது 28). எம்.இ. படித்து முடித்த இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி மஞ்சுளா (25). இவரும் எம்.இ. படித்து முடித்து விட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வந்தார். 2 பேரும் காதலித்து கடந்த 2015–ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சதானாஸ்ரீ என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18–ந் தேதி சுடிதார் துப்பட்டாவால் வீட்டில் தூக்குப்போட்டு நிலையில் மஞ்சுளா பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோபி போலீசார் இதை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதுமட்டுமின்றி மஞ்சுளாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து கோபி ஆர்.டி.ஓ. கோவிந்தராஜ் மேல் விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் மஞ்சுளாவின் கழுத்தில் காயம் இருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். மேலும் கயிறு போன்ற ஏதோ ஒரு பொருளால் கழுத்தை நெரித்து மஞ்சுளா படுகொலை செய்யப்பட்டதும், தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கழுத்தை நெரித்து மஞ்சுளா படுகொலை செய்யப்பட்டது உறுதியானதால் தற்கொலை வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ததுடன், அவருடைய கணவர் லிங்கேஸ்வரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழுத்தை நெரித்து பேராசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கோபி அருகே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்