அனைத்து வீட்டுமனைகளுக்கும் நத்தம் பட்டா வழங்க கோரிக்கை

குப்புச்சிபாளையம் காமாட்சி நகரில் உள்ள அனைத்து வீட்டுமனைகளுக்கும் நத்தம் பட்டா வழங்க வலியுறுத்தி நேற்று அப்பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2017-08-21 23:00 GMT
நாமக்கல்,

பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் காமாட்சி நகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

காமாட்சி நகரில் கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 245 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். விவசாய கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களுக்கு கடந்த 1992-ம் ஆண்டு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா (ஹச்.எஸ்.டி. பட்டா) வழங்கப்பட்டது. நாங்கள் பலமுறை இதை நத்தம் பட்டாவாக மாற்றுவதற்கு மனு கொடுத்து உள்ளோம். ஆனால் எங்களின் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி காமாட்சி நகரில் நத்தம் பட்டா கொடுப்பதற்காக அரசு அதிகாரிகள் , ஊரில் ஒரு தெருவை மட்டும் பார்வையிட்டு சென்றனர். அந்த பகுதிக்கு மட்டும் பட்டா வழங்க இருப்பதாக சொன்னதால், நாங்கள் வருவாய்த்துறை அலுவலர் ஒருவரிடம் சந்தேகம் கேட்க சென்றோம். அவர் எங்களை அச்சுறுத்தும் வகையில் பேசினார். மேலும் நான் நினைத்தால், யாருக்கும் பட்டா கிடைக்கவிடாமல் செய்து விடுவேன் என மிரட்டும் தோரணையில் பேசினார். மேலும் அரசு அதிகாரிகள் ஒருசாரருக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்படுகின்றனர்.

எனவே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு நத்தம் பட்டா கொடுப்பது சம்பந்தமாக அரசு அதிகாரிகள் காமாட்சிநகரில் முகாம் ஒன்றை நடத்தி, பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து யாருக்கும் பாதிப்பு வராத வகையில் வரைபடம் போட்டு அனைத்து வீட்டுமனைகளுக்கும் நத்தம் பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்