பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கட்டணம் இல்லாமல் விழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும்

பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கட்டணம் இல்லாமல் விழாக்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று படுகர் ஆதிவாசி சக்தி அமைப்பினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2017-08-21 22:30 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், நீலகிரி படுகர் ஆதிவாசி சக்தி அமைப்பு தலைவர் குள்ளாகவுடர் தலைமையில் அதன் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

கடந்த 1950–ம் ஆண்டு படுகர் சமுதாய மக்கள் மலைவாழ் மக்கள் பட்டியலில் இருந்தனர். பின்னர் 1956–ம் ஆண்டு பிற்பட்டோர் மற்றும் பழங்குடியின ஆணையர் வெளியிட்ட பட்டியலில் படுகர் சமுதாய மக்கள் மலைவாழ் மக்கள் பட்டியலில் இல்லை.

இதுகுறித்து அன்று முதல் இன்று வரை படுகர் இன மக்களை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் காரணமாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், 2 மாத காலத்தில் படுகர் சமுதாய மக்களை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்ப்பது குறித்த முழு தகவல்களையும் மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும் படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே படுகர் இன மக்களை மலைவாழ் மக்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் படுகர் மக்கள் நடத்தும் விழாக்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. மலைவாழ் மக்கள் அங்கு கட்டணம் இல்லாமல் விழாக்கள் நடத்த அனுமதிக்கப்படுகிறது. எனவே பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கட்டணம் இல்லாமல் விழாக்கள் நடத்த படுகர் இன மக்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி எல்க்ஹில் குமரன் நகர் பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மாதா கெபியை அகற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:–

எல்க்ஹில் குமரன் நகர் பகுதியில் 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மாதா கெபி ஒன்று உள்ளது. தற்போது, அந்த கெபியின் உயரத்தை அதிகரிப்பதற்காக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. ஆனால், மாதா கெபியை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் நோட்டீசு அனுப்பியது. பல ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடு இன்றி அங்கு நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டு வழிபடுவார்கள். எனவே மாதா கெபியை அங்கிருந்து அகற்றாமல் தொடர்ந்து அப்பகுதியில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்