ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது நடவடிக்கைக்கோரி கலெக்டரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கணேஷிடம் தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

Update: 2017-08-21 23:00 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் நைனாமுகமது தலைமையில் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள குளங்கள் அனைத்திற்கும் தண்ணீர் வரும் வரத்து வாரிகள் மற்றும் வீதிகளில் உள்ள தோரணவாய்க்கால் அனைத்தையும் தூர்வாரி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

இதேபோல தமிழ் பண்பாட்டு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில், நாங்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆபாசமான நடன நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய அறிவுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் கடந்த 20–ந் தேதி வெளிமாநில பெண்களை கொண்ட ஆபாச நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப்போல புதுக்கோட்டை மாவட்டத்தில் சித்தன்னவாசல், ஆரியூர், சீமானூர், கத்தரிக்காடு, திருவாப்பாடி, அம்மன் குறிச்சி, திருமயம் ஆகிய பகுதிகளில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எனவே சமுதாய சீர்கேட்டை ஏற்படுத்தும் இந்த ஆபாச நடன நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

பொன்னமராவதி தாலுகா ஆலவயல் ஊராட்சி செம்மலாபட்டி கிராமபொதுமக்கள் கொடுத்த மனுவில், தமிழக அரசு வழங்கும் பயிர் காப்பீடு திட்டத்தில் எங்கள் பகுதியில் பயிர் காப்பீடு தொகை செய்த 46 குடும்பங்களுக்கு 4.5 சதவீதம் வரை மட்டுமே பயிர்காப்பீடு தொகை வழங்கப்பட்டது. இதே ஊராட்சியில் ஆலவயலில் 31 சதவீதம் வரை பயிர் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் கிராமத்திற்கு வழங்கப்பட்டு உள்ள 4.5 சதவீதத்தை ரத்து செய்து விட்டு, ஆலவயலுக்கு வழங்கியதுபோல எங்கள் பகுதியான செம்மலாபட்டிக்கு 31 சதவீதம் பயிர் காப்பீடு தொகை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

கோட்டைப்பட்டினம் கொடிக்குளம் சகோதரபுரம் பகுதியை சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 50–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருகிறோம். நாங்கள் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் வீட்டுவரி செலுத்தி வருகிறோம். மேலும் எங்களது வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டு, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். ஆனால் நாங்கள் வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பம் செய்தும், இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. எனவே எங்கள் மனு மீது கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்