பொதுவழியில் செல்ல இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை கோரி பெண்கள் தீக்குளிக்க முயற்சி

பொதுவழியில் செல்ல இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-08-21 23:00 GMT
கிருஷ்ணகிரி,

பர்கூர் அருகே உள்ள ஜிகினிகொல்லை பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருடைய மனைவி சரோஜா. இவர் களுடைய மருமகள்கள் நந்தினி, பத்மா, சசிகலா ஆகியோர் ஒரு கைக்குழந்தையுடன் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரே தாங்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் கேனில் இருந்த மண்எண்ணையை தங்கள் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து அழைத்து சென்று, உடலில் தண்ணீரை ஊற்றி, கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடுகட்டி வசித்து வருகிறோம். வீட்டிற்கு சென்று வர காலம், காலமாக அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பொது வழியில் சென்று வந்தோம். இந்நிலையில், அந்த வழியில் செல்லக்கூடாது என சிலர் பிரச்சினை செய்து வருகிறார்கள். இதனால் நாங்கள் வீட்டிற்கும் செல்ல முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் இருந்து வருகிறோம்.

கடந்த மாதம் 30-ந் தேதி அந்த பொது வழியில் சென்ற நந்தினி, பத்மா, சசிகலா ஆகியோரை தாக்கினார்கள். இதனால் அவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்தனர். இது குறித்து போலீசில் புகார் அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த பிரச்சினை குறித்து விசாரித்து உரிய தீர்வு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க பர்கூர் போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பொது வழியில் செல்ல இடையூறு செய்பவர்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்