பயணி தள்ளிவிட்டதில் காயமடைந்த டிக்கெட் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி சாவு

பயணி தள்ளி விட்டதில் காயமடைந்த டிக்கெட் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

Update: 2017-08-22 23:00 GMT

மும்பை,

நவிமும்பை ரபாலே ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தவர் ரகுநாத் (வயது56). இவர் கடந்த 8–ந்தேதி பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த பயணியிடம் ரகுநாத் டிக்கெட் தருமாறு கேட்டு உள்ளார். ஆனால் அந்த பயணியிடம் உரிய டிக்கெட் இல்லை.

எனவே அவர், அந்த பயணியிடம் அபராதம் செலுத்துமாறு கூறினார். ஆனால் அந்த பயணி அபராதம் செலுத்தாமல் அவரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ரகுநாத்தை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரின் தலையில் அந்த பகுதியில் கிடந்த இரும்பு கம்பி பலமாக தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த ரகுநாத் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.

ரெயில்வே போலீசார் டிக்கெட் பரிசோதகர் ரகுநாத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல்சிகிச்சைக்காக ஐரோலி எம்ய்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கோமா ஏற்பட்டதை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி டிக்கெட் பரிசோதகர் ரகுநாத் பலியானார். சம்பவம் குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை தள்ளிவிட்ட நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்