பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தஞ்சையில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-22 23:00 GMT
தஞ்சாவூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அதுவரை 20 சதவீத இடைக்கால நிவாரணத்தை கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 420 அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் 4,713 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சில அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. பல அலுவலகங்களில் குறைந்த அளவு ஊழியர்கள் பணி புரிந்தனர். தஞ்சை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 285 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களில் 8 ஆயிரத்து 489 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளிகள் திறந்து இருந்தாலும் வகுப்புகள் நடைபெறவில்லை. ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் மாணவர்களை பார்த்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் இளையராஜா, தமிழ்நாடு ஆரம்ப மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் கிட்டு, கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துராஜா, போலீஸ்துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் அருள்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பின்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூறும்போது, இந்த ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் வருகிற 26, 27 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடுகள் நடத்தப்படும். இறுதியாக அடுத்தமாதம்(செப்டம்பர்) 7-ந் தேதி முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் முடங்கும் வகையில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

மேலும் செய்திகள்