அமித்ஷாவின் தந்திரங்கள் கர்நாடகத்தில் எடுபடாது ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு பா.ஜனதாவினருக்கு தகுதி கிடையாது

அமித்ஷாவின் தந்திரங்கள் கர்நாடகத்தில் எடுபடாது என்றும், ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு பா.ஜனதாவினருக்கு தகுதி கிடையாது என்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

Update: 2017-08-22 22:45 GMT

பெங்களூரு,

துமகூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அரசு நிலத்தை சட்டவிரோதமாக விடுவித்ததால் எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எடியூரப்பா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கும், கர்நாடக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய கர்நாடக அரசும், முதல்–மந்திரி சித்தராமையாவும் தான் காரணம் என்று பா.ஜனதாவினர் தேவையில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இந்த விவகாரத்தை பா.ஜனதாவினர் பெரிதுபடுத்துகிறார்கள். காங்கிரஸ் அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தகவல் வந்துள்ளது. அந்த கருத்து கணிப்புக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், பிற முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த மக்கள் முன்வந்துள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், முதல்–மந்திரி யார்? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். முதல்–மந்திரி யார்? என்ற போட்டி தற்போது எழவில்லை. அதனால் அதுபற்றி பேச வேண்டிய அவசியமில்லை. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பெங்களூருவுக்கு வந்து கட்சி தலைவர்களுடன் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசித்துவிட்டு சென்றுள்ளார். அமித்ஷாவின் ராஜ தந்திரங்கள் உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வேண்டுமானால் வெற்றியை தேடித்தந்திருக்கலாம். ஆனால் கர்நாடகத்தில் அமித்ஷாவின் தந்திரங்கள் எடுபடாது.

கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபட்டு வருவதாக அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள். கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் முதல்–மந்திரி மீதோ, மந்திரிகள் மீதோ எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. காங்கிரஸ் கட்சியினர் யாரும் ஊழல் வழக்குகளில் சிக்கவில்லை. அமித்ஷா, எடியூரப்பா, கட்டா சுப்பிரமணிய நாயுடு தான் ஊழல் வழக்குகளில் சிறைக்கு சென்று வந்துள்ளனர். அதனால் ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு பா.ஜனதாவினருக்கு எந்த தகுதியும் கிடையாது. காங்கிரஸ் அரசை குறை கூறுவதையும் பா.ஜனதாவினர் நிறுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

மேலும் செய்திகள்