திருவாடானை தாலுகாவில் டெங்கு தடுப்பு நடவடிக்கை சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் ஆய்வு

திருவாடானை தாலுகாவில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2017-09-05 22:30 GMT

தொண்டி,

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க கலெக்டர் நடராஜன் உத்தரவின் பேரில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் எஸ்.பி.பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை சார்பில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலை தடுக்க பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன் ஆய்வு செய்தார். அப்போது வட்டாணம் ஊராட்சி தாமோதிரன்பட்டினம் மற்றும் எஸ்.பி.பட்டினம் பகுதிகளில் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதை ஆய்வு செய்தார். மேலும் காய்ச்சல் கண்டவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவர் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தாமோதிரன்பட்டினம் அரசுப்பள்ளியில் குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள், சுற்றுப்புறசூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வட்டாணம் ஊராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிநீரில் கிருமி நாசினி மருந்துகளை தெளிக்க வேண்டும் என ஊராட்சி செயலாளருக்கு அறிவுரை வழங்கினார். எஸ்.பி.பட்டினம் ஊராட்சியில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் பொதுமக்களை நேரில் சந்தித்து டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள பொது சுகாதார துறை பணியாளர்கள், அலுவலர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது அங்கு கூடி இருந்த பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

வீடுகள், கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் கொசுப்புழுக்கள் உருவாகும் சூழ்நிலையை ஏற்படுத்துவோர் மீது பொதுசுகாதார சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முதற்கட்டமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு வழங்கவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அவருடன் மாவட்ட பூச்சியியல் வல்லுனர் உதயகுமார், வட்டார மருத்துவ அதிகாரி சங்கரன், டாக்டர்கள் சோனைமுத்து, கார்த்திகேயன், வட்டார சுகாதார ஆய்வாளர் வீரப்பெருமாள், சுகாதார ஆய்வாளர்கள் சந்தனராஜ், இளம்பரிதி, அருள், கண்ணன் ஆகியோர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்