சிறுமி மரணத்தில் டெங்கு காய்ச்சலை அரசு மருத்துவமனை மறைக்கிறது உறவினர்கள் குற்றச்சாட்டு

சிறுமி மரணத்தில் டெங்கு காய்ச்சலை மறைத்து, வைரஸ் காய்ச்சலால் இறந்ததாக அரசு மருத்துவமனை கூறுவதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

Update: 2017-09-05 23:15 GMT
சென்னை,

சென்னை செங்குன்றத்தை அடுத்த வடகரையை சேர்ந்தவர் ரமேஷ் ராபர்ட். இவரது மனைவி ஜெசிந்தா. இவர்களது மகள் ஆலிஸ் எத்தில்டா (வயது 6) செங்குன்றம் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்துவந்தாள். கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஆலிஸ் எத்தில்டாவை பெற்றோர் மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. மருத்துவர்கள் அவளது ரத்த மாதிரியை சோதனை செய்ததில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. இதனால் 4-ந் தேதி அவளை மேல்சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட ஆலிஸ் எத்தில்டா அன்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். அவளது உறவினர்கள் மருத்துவர்களிடம் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

சிறுமி உயிரிழப்பு குறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வழங்கிய சான்றிதழில் சிறுமி ‘வைரஸ்’ காய்ச்சலால் இறந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை கண்டு அவளது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து மருத்துவர்களிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சிறுமியின் சித்தப்பா கவிபாரதி கூறியதாவது:-
ஆலிஸ் எத்தில்டா ரத்த மாதிரியை தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதித்ததில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது. இதை குறிப்பிட்டு எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலில் டெங்கு காய்ச்சலால் ஆலிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை அளித்தனர்.

ஆலிஸ் இறந்ததை அடுத்து மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலை மறைத்து, அவள் வைரஸ் காய்ச்சலால் இறந்ததாக கூறியுள்ளனர். இதுபற்றி நாங்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது, டெங்கு காய்ச்சலும், வைரஸ் காய்ச்சலும் ஒன்றுதான் என அலட்சியமாக பதில் அளித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்