ஓசூரில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்

ஓசூரில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-06 23:00 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள ராஜேஸ்வரி லே அவுட்டில் இருந்து பேகேப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் சாலையில் மண்ணை கொட்டி தற்காலிகமாக நடவடிக்கை எடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஓசூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அந்த சாலை தற்போது சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று பேகேப்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்