நதிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் திருச்சியில் ஜக்கி வாசுதேவ் பேச்சு

“நதிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றவேண்டும்” என்று திருச்சியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பேசினார்.

Update: 2017-09-06 23:00 GMT
திருச்சி,

கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் ‘நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்’ என்ற பெயரில் ஒரு இயக்கத்தை நடத்தி வருகிறார். இதற்காக 16 மாநிலங்கள் வழியாக தலைநகர் டெல்லி வரை 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு காரை அவரே ஓட்டி செல்லும் விழிப்புணர்வு பயணத்தையும் நடத்துகிறார்.

இந்த விழிப்புணர்வு கார் பயணம் கடந்த 3-ந்தேதி கோவையில் தொடங்கியது. கோவையில் இருந்து புறப்பட்ட இந்த கார் பயணம் கன்னியாகுமரி, மதுரை வழியாக நேற்று திருச்சி வந்தடைந்தது.

ஜக்கி வாசுதேவ் தலைமையில் வந்த இந்த கார் பயண குழுவினருக்கு நேற்று காலை 7 மணி அளவில் திருச்சி- சென்னை பைபாஸ் ரோடு ஓயாமரி சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் ப.குமார் எம்.பி., பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் அய்யாக்கண்ணு, மன்னார்குடி ரெங்க நாதன், தனபால், செல்லமுத்து, விசுவநாதன், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது:-

நதிகள் என்பது உயிரோட்டமான ஒரு சக்தி. அது ஒரு பொருள் அல்ல. நதி நீர் பிரச்சினை நம்முன் 70 ஆண்டுகள் ஒரு சவாலாக இருக்கிறது. இதனை நாம் முறைப்படி தீர்க்க முன்வரவில்லை என்றால் அந்த பிரச்சினைகள் நமக்கு முடிவை ஏற்படுத்தி விடும். நதிகள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு யார் காரணம் என்பதை கண்டு பிடிக்கவேண்டும். சண்டை போட்டால் பிரச்சினை தீர்ந்து விடாது. மண் மீது எல்லோருக்கும் பாசம் இருக்கவேண்டும். அதனால் தான் அதனை தாய் மண் என்று சொல்கிறோம்.

நதிகளை மீட்பதற்கான விழிப்புணர்வு கார் பயணம் பற்றி 16 மாநில முதல் - அமைச்சர்களுக்கு கடிதம் எழுதினேன். அவர்கள் அதற்கு 15 நாட்களுக்குள் பதில் அளித்து விட்டனர். மாநில முதல்வர்கள் ஒத்துழைப்பு தந்து விட்டால் மத்திய அரசும் ஒத்துழைப்பு தரும். எனவே நதிகளை பாதுகாக்க நாம் தீவிரமாக செயல்பட வேண்டியது உள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள 6 கோடி பேரும் 80009 80009 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு’ கால் கொடுக்க வேண்டும். இந்தியா முழுவதும் 30 கோடி பேர் வருகிற அக்டோபர் 2-ந்தேதிக்குள் இதே போன்று மிஸ்டு கால் கொடுத்தால் நதிகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

தண்ணீருக்காக நாம் இதனை செய்யவில்லை என்றால் இன்னும் 15 ஆண்டுகளில் நாம் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும். காவிரியில் தண்ணீர் வரவேண்டுமானால் நாம் இதனை செய்தே தீரவேண்டும். தென்னிந்தியாவில் 12 ஆயிரம் வருடங்களாக நல்ல முறையில் விவசாயம் நடந்ததாக வரலாற்று தகவல்கள் உள்ளன. அப்படிப்பட்ட வளமான இந்த மண் இப்போது பாலைவனமாக மாறுவதற்கு காரணம் என்ன என்பதை கண்டறியவேண்டும். மாறி வரும் சூழலுக்கு தகுந்தபடி புதிய தொழில் நுட்பத்தை பின்பற்றி தேவையான பயிர்களை சாகுபடி செய்யவேண்டும். நமது வேளாண்மை பல்கலைக்கழகங்களில் எவ்வளவோ தொழில் நுட்பங்கள் உள்ளன. அதனை நாம் செயல்படுத்த வேண்டும். ஆற்றுப்படுகை உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். எனவே இருக்கிற மண்வளத்தை காக்க, நதிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்றவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஈஷா யோகா மைய தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மிஸ்டு கால் கொடுப்பதற்கான செல்போன் எண்ணுடன் கூடிய சிறிய அளவிலான பதாகைகளை கைகளில் ஏந்தியபடி நின்றனர். திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஜக்கி வாசுதேவ் தனது கார் பயணத்தை புதுச்சேரிக்கு தொடங்கினார். 

மேலும் செய்திகள்