அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் எதிரொலி: ஒரே வாரத்தில் 3,500 பேர் பழகுனர் உரிமம் பெற்றனர்

அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயத்தை தொடர்ந்து மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 3,500–க்கும் மேற்பட்டவர்கள் பழகுனர் உரிமம் பெற்றுள்ளனர் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.

Update: 2017-09-06 22:09 GMT

சேலம்,

சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு, தெற்கு, கிழக்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய 6 இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களும், ஓமலூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகங்களில் வாகன ஓட்டிகளுக்கு பழகுனர் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பழகுனர் மற்றும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு ஏராளமானவர்கள் படையெடுத்து வருகின்றனர். மாவட்டத்தில் ஒரே வாரத்தில் மட்டும் 3,500–க்கும் மேற்பட்டவர்கள் பழகுனர் உரிமம் பெற்றுள்ளனர். இதுதவிர ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறும் போது, ‘‘அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் எதிரொலியாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பழகுனர் மற்றும் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக பொதுமக்கள் ஏராளமானவர்கள் வருகிறார்கள். அதாவது வழக்கத்தை விட இருமடங்கு கூடுதலாக வருகிறார்கள். மாவட்டத்தில் ஒரே வாரத்தில் மட்டும் 3,500–க்கும் மேற்பட்டவர்கள் பழகுனர் உரிமம் பெற்றுள்ளனர்‘‘ என்றார்.

மேலும் செய்திகள்