கலெக்டர் அலுவலகம் அருகில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். சாலையோரம் சமையல் செய்ய நடந்த முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

Update: 2017-09-14 23:00 GMT
திருச்சி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் இயங்கவில்லை. கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் பணிக்கு வராததால் சான்றிதழ் வழங்குதல் உள்பட பல பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

போராட்டத்தில் குதித்து உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நேற்று முன்தினம் கொட்டும் மழையில் கலெக்டர் அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டம் நடத்த வந்தனர். போலீசார் உள்ளே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவர்களில் 141 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். தரையில் விளம்பர பதாகைகள் மற்றும் காகிதங்களை விரித்து அமர்ந்தனர். அவர்கள் சாமியானா பந்தல் அமைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஏற்கனவே கொண்டு வந்திருந்த சாமியானா பந்தல் துணி மற்றும் கம்புகளை தனியாக வைத்து இருந்தனர். அங்கேயே டீ தயாரித்து வழங்கப்பட்டது. போராட்ட களத்திலேயே சமையல் செய்து சாப்பிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக அண்டா உள்ளிட்ட பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. வெங்காயம், தக்காளி, தேங்காய் உள்பட காய்கறிகளும், மளிகை பொருட்களும் கொண்டு வரப்பட்டன. அந்த காய்கறிகளை ஆசிரியைகள், சத்துணவு ஊழியர்கள் நறுக்கினார்கள்.

கியாஸ் சிலிண்டர் மற்றும் அடுப்பு கொண்டு வரப்பட்டு சமைக்கும் பணி தொடங்கினர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். சாலையோரம் சமையல் செய்ய அனுமதிக்க முடியாது என்று கூறியதால், சமையல் பணி தொடர்ந்து நடைபெறவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஆசிரியர்களுக்கு மதிய சாப்பாட்டை போலீசாரே வாங்கி கொடுத்தனர். போராட்ட களத்தில் இருந்த ஆசிரியைகள் மற்றும் அரசு ஊழியர்கள் கும்மியடித்து நாட்டுப்புற பாடல்களை பாடினார்கள். அவ்வப்போது கோரிக்கைகளை விளக்கி சங்க தலைவர்களும் பேசினார்கள்.

இரவு 7 மணிக்கு பின்னர் இருள் சூழ்ந்த பின்னரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. அப்போது அந்த இடத்தில் மின் விளக்கு வசதி ஏற்படுத்த முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்காததால் இருட்டிலேயே அவர்கள் தரையில் அமர்ந்து இருந்தனர். ஒலிபெருக்கி பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. இரவில் காத்திருப்பு போராட்டம் நடத்த வேண்டாம், வீட்டுக்கு போய்விட்டு காலையில் வாருங்கள் என போலீசார் போராட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சக்தி கணேசன் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டக்காரர்கள் இரவு 8 மணியளவில் கலைந்து அவரவர் வீட்டிற்கு சென்றனர். 

மேலும் செய்திகள்