அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் ரெயில் மறியல்

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை லேசான தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர்.

Update: 2017-09-14 23:00 GMT
அரக்கோணம்,

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் ரெயில் மார்க்கத்தில் நேற்று அதிகாலை 3-40 மணியளவில் பாயிண்ட் கருவியில் கோளாறு ஏற்பட்டதால் சிக்னல் செயல் இழந்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் மனோகரன், ரெயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலர் எத்திராஜூலு மற்றும் ரெயில்வே ஊழியர்கள், சிப்பந்திகள் சம்பவ இடத்திற்கு சென்று சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்த மின்சார ரெயில் கைனூர்கேட் அருகே காலை 8-30 மணிக்கு நிறுத்தப்பட்டது. நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டதால் ரெயிலில் இருந்த பயணிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள் ஆத்திரமடைந்து ரெயிலில் இருந்து கீழே இறங்கி நின்றனர்.

ரெயில் மறியல்-தடியடி

அப்போது சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டு இருந்த சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் கைனூர் ரெயில்வே கேட் அருகே சென்றபோது அந்த ரெயில் முன்பு பயணிகள் அமர்ந்து மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரெயில் மறியல் செய்த பயணிகளிடம் ரெயில்வே அதிகாரிகள், போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் லேசான தடியடி நடத்தி பயணிகள் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிக்னல் கோளாறு காலை 9-10 மணியளவில் சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் ரெயில்கள் வழக்கம் போல் சென்றன.

பயணிகள் அவதி

சிக்னல் கோளாறு மற்றும் ரெயில் மறியலால் திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரெயில், திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில், சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயில் ஆகியவை ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டு சுமார் 40 நிமிடம் தாமதமாக சென்றது. இதன் காரணமாக பயணிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்