ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை மூடவேண்டும் மன்சூர் அலிகான் பேச்சு

நெடுவாசல் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை மூடவேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.

Update: 2017-09-17 23:00 GMT
வடகாடு,

வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் 2-ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். நேற்றும் 159-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கிணறுகளை மூடவேண்டும்

போராட்டத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது:-

பெரு முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்காக சட்டத்தையே மாற்றி எழுதுகிற மத்திய அரசு தமிழக விவசாயிகளின் கடன்களை ஏன் தள்ளுபடி செய்யவில்லை?. நெடுவாசல் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை மூடவேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். 1,176 மதிப்பெண் எடுத்த அனிதா போன்றவர்களை மருத்துவராக விடாமல் தடுப்பதுதான் தரமான கல்விக்கொள்கையா?. தமிழக அரசு துணிவுடன் எதிர்கொண்டு நீட் தேர்வை தூக்கி எறிய வேண்டும். இல்லையேல் மக்கள் தூக்கி எறிவார்கள், என்றார்.

கனவு தகர்ந்து விட்டது

தொடர்ந்து திரைப்பட இயக்குனர் களஞ்சியம் பேசுகையில், கதிராமங்கலத்தில் மீத்தேன் வாயு எடுத்து விவசாய நிலங்களை அழித்து கொண்டிருக்கின்றனர். நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதாக கூறி விவசாய நிலங்களை அழிக்க பார்க்கிறார்கள். தமிழக அரசு விவசாயிகளை பாதிக்கக்கூடிய இத்திட்டத்திற்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் சாதகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்களின் கனவு தகர்ந்து விட்டது. நவோதயா பள்ளிகள் மூலமாக மத்திய அரசு இந்தியை திணிக்க நினைக்கிறது, என்றார்.

முன்னதாக நல்லாண்டார்கொல்லையில் தீ விபத்து ஏற்பட்ட கழிவு சேகரிப்பு தொட்டியை நடிகர் மன்சூர் அலிகான், திரைப்பட இயக்குனர் களஞ்சியம் ஆகியோர் பார்வையிட்டனர். 

மேலும் செய்திகள்